search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணக்கொண்டாட்டம் ரத்து"

    ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. #KeralaFloods #Onamfestival
    தக்கலை:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் வெள்ளத்தில் மிதந்தது.



    மழை வெள்ளம் காரணமாக கேரள மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், கேரளாவில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கிவிட்டாலே கேரளாவில் ஓணக் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த மாதம் மழை வெளுத்து வாங்கியதால் அங்கு ஓணக் கொண்டாட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

    கேரள அரசும் இந்த ஆண்டு ஓண விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்காக நடக்கும் ஊர்வலம், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.

    இதுபோல ஏராளமான மக்கள் ஓணக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்குள் ஓண வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொண்டனர். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் பகிர்ந்து உண்டனர்.

    கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களை கட்டும். தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணத்தையொட்டி அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும்.

    புலியாட்டம், செண்டை மேளங்களும், புத்தாடை அணிந்து வலம் வரும் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

    இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணப்பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

    இதனால் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #KeralaFloods #Onamfestival
    ×